

பொள்ளாச்சி: தமிழ்நாடு நுகர்ப் பொருள் வாணிபக் கழகத்தின் மண்ணெண்ணெய் விநியோகம் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி, பொள்ளாச்சியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சியை அடுத்த ஜோதி நகர் பகுதியில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் செயல்படுகிறது.
இங்குள்ள மண்ணெண்ணெய் விநியோகம் நிலையம் மூலமாக, ஜோதி நகர், பிகேஸ் காலனி, காமாட்சி நகர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகிறது. இங்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மண்ணெண்ணெய் வாங்க நேற்று வந்தமக்களிடம், இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்து, கடையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையடுத்து கலைந்து சென்றனர்.