

சென்னை: மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் 15 நிமிடங்கள் வாகன நிறுத்த போராட்டம் நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
அதன்படி, நண்பகல் 12 முதல் 12.15 மணிவரை முக்கிய சந்திப்புகளில் சிஐடியு அமைப்பினர் வாகனங்களை நிறுத்தியும், வாகன ஓட்டிகளை வாகனங்களை நிறுத்த வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் புதிய மோட்டார் வாகன சட்டம் குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கி கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த போராட்டம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. சென்னை, ஸ்டெர்லிங் சாலை சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.