

சென்னை: விஐடி கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சென்னை விஐடியில் தேசிய அளவிலான கலை, விளையாட்டுப் போட்டிகள் `வைப்ரன்ஸ்' என்ற பெயரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி இந்தாண்டுக்கான 7-வது ‘வைப்ரன்ஸ்-2023’ கலைவிழாநாளை தொடங்கி மார்ச் 4-ம் தேதிவரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆடல், பாடல் உள்ளிட்ட 150 வகையான கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
மறுபுறம் கிரிக்கெட், ஹாக்கி உட்பட 40 விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதிதொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கலை, விளையாட்டுப் போட்டிகளின் மொத்த பரிசுத் தொகை ரூ.10 லட்சமாகும்.
வைப்ரன்ஸ் தொடக்க நிகழ்வில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே கலந்து கொள்கிறார். பிரபல பின்னணி பாடகர்கள் பென்னி தயாள், ஷெர்லி செட்டியா பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.
தொடர்ந்து 2-ம் நாள் நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சோனு நிகமின் இசைக் கச்சேரி, புகழ்பெற்ற எம்.ஜே5 குழுவின் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 4-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் திரைப்பட நடிகர்கள் பிரசன்னா, சினேகா தம்பதி கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்க மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கு ரூ.100 முதல் ரூ.1,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் வைப்ரன்ஸ் கலை விழாவுக்கான டி-சர்ட், பேனர் வெளியிடப்பட்டது. இதில் சென்னை விஐடியின் இணைதுணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், இயக்குநர் (மாணவர் நலன்) ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.