Published : 21 Sep 2017 12:14 PM
Last Updated : 21 Sep 2017 12:14 PM

தனியார் முதலீட்டில் பேருந்து நிலையம்: திவாலாகி விட்டதா தமிழக அரசு?- ராமதாஸ் கேள்வி

பேருந்து நிலையங்களை தனியார் பங்களிப்பில் கட்டுவது என்பது கிட்டத்தட்ட தனியார்மயம் போன்றதே. இது பிற்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாகப்பட்டினத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம்... மயிலாடுதுறை பேருந்து நிலையம் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும் என்ற அறிவிப்பு தான்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்காக மணக்குடி கிராமத்தில் 13.77 ஏக்கர் நிலம் இரு ஆண்டுகளுக்கு முன்பே மயிலாடுதுறை நகராட்சியால் வாங்கப்பட்டு, தமிழக அரசிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டது. தமிழக அரசு அதன் சொந்த நிதியில் பேருந்து நிலையத்தைக் கட்டி மயிலாடுதுறை நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். இது தான் வழக்கம். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது பல யூகங்களை மட்டுமின்றி, அச்சங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அவற்றை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது ஆகும். அங்கு 2 பேருந்து நிலையங்கள் இருந்தாலும் அவை அளவில் மிகவும் சிறியவை. அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் வந்து செல்ல வசதி இல்லாததால், பேருந்து நிலையங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதற்கு முடிவுகட்டும் வகையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை நான் பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

இதற்காக மயிலாடுதுறையில் பாமக சார்பில் ஏராளமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பின் பேருந்து நிலையம் அமைக்க நிலம் வாங்கித் தரப்பட்டு பல ஆண்டுகள் ஆகும் நிலையில் கட்டுமானப் பணிகளை அரசு தொடங்காமல் இழுத்தடித்து வந்தது. இப்போது பேருந்து நிலையத்தை அரசு நிதியில் கட்டாமல் தனியார் பங்களிப்புடன் கட்டுவதற்கு பினாமி ஆட்சியாளர்கள் துடிப்பதன் நோக்கம் என்ன?

தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பல்லாயிரக்கணக்கான கோடிகள் செலவாகும். அதற்கான நிதி அரசிடம் இல்லை என்பதால் அவை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. இதுவும் கூட ஏற்றுக்கொள்ள முடியாதது தான் என்றாலும் கூட, வேறு வழியில்லாததால் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், பேருந்து நிலையம் அமைக்க மிகக்குறைந்த செலவே ஆகும். அதைக்கூட அரசு செய்யாமல் தனியார் பங்களிப்பைத் தேடுகிறது என்றால், தமிழக அரசு திவாலாகும் நிலைக்கு சென்று விட்டதா? என்ற ஐயம் எழுகிறது.

அண்மைக்காலமாகவே தமிழக அரசு சாதாரண திட்டங்களைக் கூட தனியார் நிதியில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. சென்னையில் தியாகராயர் நகர் பணிமனை, திருவான்மியூர் பணிமனை, விக்ரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி மத்திய பேருந்து நிலையம், சேலம் பழைய பேருந்து நிலையம், மதுரை பெரியார் பேருந்து நிலையம், வேளாங்கண்ணி, கட்டபொம்மன்நகர், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை ஆகிய 11 பேருந்து நிலையங்களில் வணிக வளாகங்களை அமைத்து வருவாய் ஈட்டிக் கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் 3 இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்தங்களை ரூ.80 கோடி செலவில் அமைக்கும் திட்டமும் தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்படுகிறது. குறைந்த முதலீட்டிலான இந்தத் திட்டங்களைக் கூட தனியார் பங்களிப்புடன் அரசு செயல்படுத்துவதற்கு இரு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, இந்தத் திட்டங்களைக் கூட செயல்படுத்த முடியாத அளவுக்கு தமிழக அரசு திவாலாகியிருக்க வேண்டும், இரண்டாவது ஆட்சியாளர்களே திகைக்கும் அளவுக்கு இத்திட்டங்கள் மூலம் கையூட்டு கிடைத்திருக்க வேண்டும்.

பேருந்து நிலையங்களை தனியார் பங்களிப்பில் கட்டுவது என்பது கிட்டத்தட்ட தனியார்மயம் போன்றதே. இது பிற்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பேருந்துகள் உள்ளே நுழையக் கட்டணம் வசூலிப்பது தொடங்கி, அங்குள்ள கடைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் வரை அனைத்து வகையான பொருளாதார அத்துமீறல்களும் அரங்கேறும் ஆபத்து உள்ளது. மற்ற பேருந்து நிலையங்களையும், போக்குவரத்துக் கழகங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான தொடக்கப்புள்ளியாகக் கூட இது இருக்கலாம். இதுகுறித்து அரசு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்.

தனியார் பங்களிப்பில் பேருந்து நிலையங்களை அமைப்பது மாநில நலனுக்கும், மக்களின் நலனுக்கும் நல்லதல்ல என்பதால், மயிலாடுதுறை மட்டுமின்றி தமிழகத்தின் எந்த பகுதியில் இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதாக இருந்தாலும் அதை கைவிட்டு, அரசு நிதியில் செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி தமிழக அரசின் நிதி நிலை குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x