

மயிலாடுதுறை: சீர்காழி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கவுன்சிலர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி (திமுக) தலைமை வகித்தார். ஆணையர் வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியபோது, திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, சுயேச்சைகள் என 12 கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்தபடி எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரில் டெண்டர் விடப்பட்ட வேலைகள் செய்து முடிக்கப்படவில்லை. சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. அதிகாரிகள் கடமைகளை சரிவர செய்யாததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குப்பை அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்களை கவுன்சிலர்கள் கூறினர்.
இதையடுத்து கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது. ஆட்சியர் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.