Published : 16 Jul 2014 09:40 AM
Last Updated : 16 Jul 2014 09:40 AM

கூடங்குளத்தில் 45 நாட்களில் வணிகரீதியில் மின் உற்பத்தி: ஆய்வுக்காக ஒரு மாதம் மின் உற்பத்தி நிறுத்தம்

`கூடங்குளம் முதலாவது அணுஉலையில் வணிகரீதியிலான மின் உற்பத்தி 45 நாட்களில் தொடங்க உள்ளது’ என அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.

கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்க, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அனுமதி அளித்தது. அக்டோபர் 22-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் மின் உற்பத்தியின் அளவு அதிகரித்தது.

சாதனை அளவாக ஜூன் 7-ம் தேதி பகல் 1.20-க்கு முழு உற்பத்தியான 1,000 மெகாவாட்டை மின் உற்பத்தி எட்டியது. தொடர்ந்து 4 நாட்களாகவே இந்த அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டது. முழு உற்பத்தி திறனை எட்டிய நிலையில் பல்வேறு கட்ட ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு,. ஆய்வு முடிவுகள் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்திடம் அளிக்கப்பட்டு வந்தன. ஜூன் 10-ம் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, இறுதிகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 17-ம் தேதி முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் 1,000 மெகாவாட்டை எட்டியது.

அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் கூறியதாவது:

’முதலாவது அணுஉலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி இன்னும் 45 நாட்களில் தொடங்கும். இதற்கான ஆய்வு பணிகளுக்காக அணு உலையின் செயல்பாடு படிப்படியாக நிறுத்தப்படும் . இன்னும் ஒரு வாரத்தில் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படும். ஆய்வு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் ஒரு மாதம் வரையில் நீடிக்கும் இதை தொடர்ந்து வணிகரீதியிலான மின் உற்பத்தி தொடங்கும்.

வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கிய பின்னர் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் 560 மெகாவாட் வரையில் தமிழகத்துக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x