Published : 22 Sep 2017 11:55 AM
Last Updated : 22 Sep 2017 11:55 AM

காவிரியில் தண்ணீர் பெற முதல்வர் பழனிசாமி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

நடப்பாண்டில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் பெற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கர்நாடகம் மற்றும் கேரளத்தில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதே நிலை நீடித்தால் தமிழக விவசாயிகளால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 10 போகம் நெல் சாகுபடி செய்திருக்க வேண்டிய நிலையில் 3 போகம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் குறுவை சாகுபடி பொய்த்து விட்டது. சம்பா சாகுபடிக்கான சாத்தியக்கூறுகள் இருக்குமா? என ஏங்கிக் கொண்டிருந்த தமிழக விவசாயிகளின் வயிற்றில் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் மழை பால் வார்த்திருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 79 அடியை எட்டியுள்ளது. இது 40.60 டி.எம்.சி. ஆகும். அணைக்கு வினாடிக்கு 7000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளின் ஒட்டுமொத்த கொள்ளளவான 104.55 டி.எம்.சியில், நேற்றைய நிலவரப்படி 57 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. 15.67 டி.எம்.சி கொள்ளவுள்ள கபினி அணை நிரம்பி வழிகிறது. 8.07 டி.எம்.சி கொள்ளவுள்ள ஹாரங்கி அணையும் நிரம்பி விட்டது. மீதமுள்ள இரு அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 41 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதே அளவில் தொடர்ந்து தண்ணீர் வந்தால் அடுத்த ஒரு வாரத்திற்குள் கர்நாடகத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி விடும். அதன்பின் 4 அணைகளுக்கு வரும் தண்ணீர் முழுவதையும் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கத் தேவையான 90 அடி நீர்மட்டத்தை மேட்டூர் அணை சில நாட்களில் எட்டிவிடக்கூடும்.

நடப்பாண்டில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் பெற எடப்பாடி தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஆட்சியாளர்கள் இனியாவது மேட்டூர் அணையிலிருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். கடந்த ஆண்டு எந்தவித திட்டமிடலும் இல்லாமல் சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் 20-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையில் 48.55 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் இருந்தது. சம்பா பருவத்திற்கு 100 முதல் 125 டி.எம்.சி. வரை தண்ணீர் தேவைப்படும். ஆனால், இதுகுறித்த எந்தவித மதிப்பீடும் இல்லாமல் கடந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தோல்வி அடைந்ததுடன், கர்நாடக அரசும் வறட்சியைக் காரணம் காட்டி தண்ணீர் திறந்து விட மறுத்துவிட்டது.

இதனால் தமிழகத்தில் சம்பா பயிர்கள் கருகின. கடன் வாங்கி சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் கருகிய துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும், கடனை செலுத்த முடியாத சோகத்தில் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்தனர். பயிர்கள் கருகியதால் கடந்த ஓராண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 500-க்கும் அதிகமாகும். இந்த ஆண்டும் அத்தகைய நிலை ஏற்படாத வகையில் சம்பா பயிர் சாகுபடிக்கான அறிவுரைகளை காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும்.

மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரின் அளவு, கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரிலிருந்து எவ்வளவு நீரை வாங்க முடியும், வட கிழக்கு பருவமழை அளவு குறித்த உத்தேச மதிப்பீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும். விதை விதைத்து நாற்று தயாரிக்க எவ்வளவு நாள் தேவையோ, அவ்வளவு நாட்களுக்கு முன்பாகவே மேட்டூர் அணை திறப்பு தேதியை அரசு அறிவிக்க வேண்டும்.

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெற்றால் தான் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக சாதிக்க முடியும். எனவே, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகத்திடமிருந்து பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x