

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக காவிரிக்கு நீர் வழங்கும் கபினி அணை நிறைந்ததால் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த வியாழக்கிழமை மாலை ஒகேனக்கல்லை வந்து அடைந்தது. அன்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இரவு நிலவரப்படி விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
இந்நிலையில் வெள்ளிக் கிழமை காலை விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்தது. எனவே, காலை முதலே ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பரிசலில் செல்லவும், தொங்கு பாலத்தில் ஆற்றை கடந்து சென்று அருவிகளை ரசிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையினர் ஒகேனக்கல் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கரையில் நின்றபடி ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரைப் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். மாலை 5 மணி நிலவரப்படி விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்தாலோ அல்லது கர்நாடக அணைகளில் நீர் திறக்கப்பட்டாலோ நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவானி அணை
இதுபோல, நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களில் அணையின் நீர் மட்டம் 11 அடி உயர்ந்து 55 அடியை எட்டியுள்ளது.