

ஊழல் வழக்கு காரணமாக முடக்கி வைக்கப்பட்டுள்ள தனது பாஸ்போர்ட்டை திரும்ப வழங்கக் கோரி ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
சென்னை ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர், கடந்த 2011-ம் ஆண்டு எனது வீட்டில் சோதனை நடத்தி, பாஸ்போர்ட் மற்றும் சில ஆவணங்களை எடுத்துச் சென்றார். ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் கட்டுப்பாட்டில் எனது பாஸ்போர்ட் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மெக்கா மற்றும் மதீனாவுக்கு புனிதப் பயணம் செல்ல வேண்டியுள்ளது. அந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய எனது பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. ஆகவே, மெக்கா மற்றும் மதீனாவுக்குச் சென்று வருவதற்கு வசதியாக எனது பாஸ்போர்ட்டை திரும்ப வழங்குமாறு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் ஜாபர் சேட் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து காவல் துறை தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.