

ராணிப்பேட்டை: திருமணம் செய்து கொள்ளுமாறு கடந்த 3 ஆண்டுகளாக பெற்ற தாயார் தன்னை கட்டாயப்படுத்தி வருவதாக, பிளஸ் 2 மாணவி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் மனு அளித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி வலியுறுத்தலின் பேரில் துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளி, கல்லூரிகளில் மாண வர்களிடமும் மற்றும் கிராமங் களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நெமிலி வட்டம் பெரும் புலிபாக்கத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் அளித்த புகார் மனுவில், "நான் மேற்குறிப்பிட்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். அதே பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறேன்.
கடந்த 3 ஆண்டுகளாக எனது தாயார், நரசிம்மன் (32) என்பவரை திருமணம் செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார். ஏற்கெனவே, எனது 2-வது அக்காவை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்த தால், அவர் 2019-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், என்னையும் எனது தாயார் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார்.
நான் படிக்க வேண்டும் என கூறியும், பல முறை மறுப்பு தெரிவித்தபோதும், அவர் கேட்பதாக இல்லை. நான் இனி வீட்டுக்கே செல்ல விரும்ப வில்லை. எனது தாயாரிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிக்குமாறு தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் வளர்மதி உடனடியாக மாணவியை காப்பகத்தில் சேர்க்குமாறு சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியாளர் நிஷா ஆகியோர் சிறுமியை அழைத்துச் சென்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அன்னை சத்யா காப்பகத்தில் சேர்க்கவும், அங்கிருந்து அவர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவும், சிறுமியின் தாயாருக்கு உரிய ஆலோசனை வழங்கவும் சமூக நலத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.