

சென்னை: தமிழகத்தில் குரூப்-2 தேர்வில் வினாத்தாள் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 446 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம்நடைபெற்றது. அதில் தேர்வான55 ஆயிரத்து 71 பேர், கடந்த 25-ம்தேதி முதன்மை தேர்வைஎழுதினர்.
இதில் வினாத்தாள் மாறி இருந்ததால் தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு, தேர்வு தாமதமாக நடைபெற்றது. எனவே தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தமிழகத்தில் 25-ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள்மாறியிருந்தன. இதன் காரணமாகபல்வேறு குளறுபடிகளுடன் தாமதமாகத் தேர்வு தொடங்கியது.அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி போன்ற முக்கியதேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக அந்த தேர்வை ரத்து செய்து, வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வை நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பல்வேறு குழப்பங்களுடன் நடந்தகுரூப் 2 முதன்மை தேர்வைரத்து செய்துவிட்டு, வேறொருதேதியில் எவ்வித குளறுபடியுமில்லாமல், நடத்திட தமிழ்நாடுஅரசுப்பணியாளர் தேர்வாணை யம் முன்வர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப்-2 முதன்மைத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை: குரூப்-2 தேர்வு குளறுபடி விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து டிஎன்பிஎஸ்சி விரைவில்விளக்கம் தெரிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது