16 நகர்ப்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.208 கோடி ஒதுக்கி அரசாணை

16 நகர்ப்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.208 கோடி ஒதுக்கி அரசாணை
Updated on
1 min read

சென்னை: இரண்டு மாநகராட்சிகள், 14 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.208.77 கோடி மற்றும் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்குவதைத் தடுக்கரூ.162.90 கோடி நிதி ஒதுக்கி நகராட்சி நிர்வாகத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர்வெளியிட்ட செய்திக்குறிப்பு: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து உள்ளாட்சி அமைப்புகளில் 24புதிய பேருந்து நிலையங்கள் ரூ.302.50 கோடியில் அமைக்கப்படும் என கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, திருப்பூர், ஓசூர் ஆகியமாநகராட்சிகள், திருவள்ளூர், வடலூர், சிதம்பரம், பேர்ணாம்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், லால்குடி, துறையூர், அரியலூர், பொள்ளாட்சி, ஆற்காடு, மேலூர்,உசிலம்பட்டி, கூடலூர், ராமநாதபுரம், திருச்செந்தூர், சாத்தூர், குளச்சல், மேட்டூர், எடப்பாடி ஆகிய நகராட்சிகள் மற்றும் சாயர்புரம், திருவட்டார் ஆகிய பேரூராட்சிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கடந்தாண்டு டிச.8-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், ரூ.115.37 கோடி மதிப்பில் திருப்பூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகள், கூடலூர், அரியலூர், வடலூர், வேதாரணயம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி ஆகிய நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பிப்.22-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், ரூ.93.40 கோடியில் ஆற்காடு, எடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூர், மேட்டூர், சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டி நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் அமைக்க அரசால் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது.

அதேபோல், மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்குவதைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டும், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.162.90 ஒதுக்கியும் பிப்.22-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிதியிலிருந்து, கோயம்புத்தூர் மாநகராட்சியில் வெள்ளத் தடுப்பு கால்வாய், திருச்சி மாநகராட்சியில் ரூ.34.10 கோடியில் மாரீஸ்திரையரங்கம் அருகில் ரயில்வே பாலம், திருப்பூர் மாநகராட்சியில் ஈஸ்வரன் கோவில் அருகில் பாலம், நடராஜர் திரையரங்கம் அருகில் உள்ள பாலத்தை விரிவாக்கம் செய்தல், கும்பகோணம் மாநகராட்சியில் ஓலைப்பட்டிணம் கால்வாயை சீரமைத்தல், கரூர் மாநகராட்சியில் உள்ள மோகனூர் வாங்கல்சாலையை மேம்படுத்துதல், தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால் கட்டுதல் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியில், காவலர் கேட் அருகில் தார்சாலை அமைத்தல்போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in