Published : 28 Feb 2023 07:02 AM
Last Updated : 28 Feb 2023 07:02 AM
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக ஏழை தொழிலாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனையில் ரூ.35 லட்சம் வரை செலவாகுமென சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக கடந்த 10-ம் தேதிஈரோட்டை சேர்ந்த கூலித் தொழிலாளி மணி (51) என்பவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர், பூரண குணமடைந்த அவரை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
மருத்துவக் கல்வி இயக்குநர் இரா.சாந்திமலர், ரெலா நிறுவனம் (மருத்துவமனை) மற்றும் மருத்துவ மையத்தின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முகமது ரெலா, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், இரைப்பை, குடல், கல்லீரல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் நாகநாத்பாபு, கல்லீரல் மருத்துவத் துறைத் தலைவர் கி.பிரேம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு பொது மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனை ஆகிய 5 மருத்துவமனைகள் மற்றும் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையும் இணைந்து கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2022-ம்ஆண்டு மார்ச் 2-ம் தேதி கையெழுத்தானது.
அதன்படி, ரூ.4 கோடி செலவில் சென்னை ராஜீவ் காந்தி அரசுபொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைசெய்வதற்காக அறுவை சிகிச்சைஅரங்கம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல்முறையாக கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின்கீழ் கடந்த 10-ம் தேதி ஈரோட்டைசேர்ந்த 51 வயதான மணி என்பவருக்கு வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனையில் ரூ.30முதல் ரூ.35 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் மூலம் இலவசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் செய்யப்பட்டு வந்த இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தற்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT