திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி பேருந்து நிலையங்கள் ரூ.1,543 கோடி செலவில் நவீனமயம்

திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி பேருந்து நிலையங்கள் ரூ.1,543 கோடி செலவில் நவீனமயம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ரூ.1,543 கோடியில் 3 முக்கிய பேருந்து நிலையங்களை நவீனமயமாக்க மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தப் புள்ளியை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தினமும் 3,233 பேருந்துகள் 176 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் 33 இடங்களில் பேருந்து பணிமனைகளும், பல்வேறு பேருந்து நிலையங்களும் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களைச் சீரமைக்க மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டு வருகிறது. இதுபற்றி கடந்த ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் பேசிய போக்குவரத்துத் துறைஅமைச்சர் சிவசங்கர், மாநிலம் முழுவதும் 16 பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களை மேம்படுத்தும்திட்டத்தின் ஒரு பகுதியாக திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து நிலையங்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரூ.1,543.38 கோடி மதிப்பீட்டில் இப்பேருந்து நிலையங்களை நவீனப்படுத்த சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நேற்று ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருவான்மியூர் பேருந்து நிலையம் 2.98 ஏக்கரில் ரூ.446.38 கோடி மதிப்பீட்டிலும், வடபழனி பேருந்து நிலையம் 6.65 ஏக்கரில் ரூ.610 கோடி மதிப்பீட்டிலும், வியாசர்பாடி பேருந்து நிலையம் 5.74 ஏக்கரில் ரூ.485கோடி மதிப்பீட்டிலும் நவீனமயமாக்கப்பட உள்ளன. வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள், நவீன கழிப்பிடங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இப்பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்பட இருக்கின்றன.

பொதுத் துறை தனியார் கூட்டு: அதேபோல் தரைதளத்தில் பணிமனை, பேருந்து நிறுத்தங்கள், பயணிகள் ஓய்வறை, கழிப்பிடங்கள், குடிநீர் விநியோகம் செய்யும் யூனிட்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இதுதவிர தற்போதைய கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் புதுப்பிக்கப்படுகின்றன. இதன்மூலம் திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து நிலையங்களும் மொத்தமாக மாறப் போகின்றன.

மேலும் பேருந்து நிலையங்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்களை ரூ.2 கோடி மதிப்பீட்டில் முறையாகப் பராமரிக்கவும், புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வசதிகளை பொதுத் துறை மற்றும் தனியார் கூட்டணியில் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள், உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இயங்கி வருவதால் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு இதன்மூலம் கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது. இதுபோலவே தற்போது மேம்படுத்தப்படும் இந்த 3 பேருந்துநிலையங்களிலும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in