Published : 28 Feb 2023 07:09 AM
Last Updated : 28 Feb 2023 07:09 AM
சென்னை: ஸ்டாப் லைன் விதிமீறலைத் தடுக்க சென்னையில் நேற்று போக்குவரத்து போலீஸார் ஒரே நேரத்தில் 287 சிக்னல்களில் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
சென்னையில் விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக விதிமீறல் வாகனங்களுக்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகை விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு, வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அதுமட்டும் அல்லாமல் முறையற்ற வாகனப் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு முதல்முறை ரூ.500, அடுத்த முறை ரூ.1500 விதிக்கப்படுகிறது. இப்படி, கடந்த 25-ம்தேதி மட்டும் சரியான வாகன எண் பலகை பொருத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த 4,132 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அடுத்த கட்டமாக ‘ஸ்டாப் லைன்’ விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு நேற்றுமுதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதை போக்குவரத்து போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் போக்குவரத்து போலீஸார் சென்னையில் நேற்று மட்டும் 287 இடங்களில் ஸ்டாப் லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
சாலைகளில் சிக்னலில் சிகப்புவிளக்கு எரியும்போது ‘ஸ்டாப் லைனை’ தாண்டி நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்த போலீஸார், இனி இதேபோல் செய்யக் கூடாது என அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT