Published : 28 Feb 2023 07:15 AM
Last Updated : 28 Feb 2023 07:15 AM
சென்னை: நீர்வாழ் உயிரினங்களின் நோய்களைக் கண்டறியும் வகையில், தேசிய அளவிலான கண்காணிப்புத் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் பர்ஷோதம் ரூபாலா, எல்.முருகன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இந்திய வெள்ளை இறால் மரபணு மேம்பாட்டு மைய அடிக்கல் நாட்டு விழா சென்னையில் உள்ள மத்திய மீன்வளத் துறை ஆராய்ச்சி மற்றும் உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் (ஐசிஏஆர்-சிபா) நேற்று நடைபெற்றது. மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோதம் ரூபாலா, இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அடிக்கல் நாட்டி வைத்தனர்.
தொடர்ந்து, நீர்வாழ் உயிரினங்களின் நோய்களைக் கண்டறிவதற்காக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் தேசிய கண்காணிப்புத் திட்ட 2-வது கட்டத்தையும் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து, இறால் வளர்ப்பு, மீன் வளம் ஆராய்ச்சி குறித்த கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பர்ஷோதம் ரூபாலா பேசியதாவது:
தமிழக கடல் எல்லைகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்கு ரூ.33.78 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லைகளில் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் மீன்வளம் பெருக்குதல் மற்றும் பலவித மீன்கள் உற்பத்திக்கான திட்டங்கள் சாத்தியமாக்கப்பட உள்ளன.
மீன்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், அறிவியல்பூர்வமான உள்ளீடுகள் கிடைப்பதற்கும், ரிப்போர்ட் ஃபிஷ்டிசீஸ் என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது. மீன்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த தகவல்களை நேரடியாக மாவட்ட மீன்வள அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதற்கும், தொழில்நுட்ப உதவியைப் பெற்று, பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் இந்த செயலி உதவும்.
மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் மீன்வளம் பெருகி உள்ளது. 2024-25-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி அளவில் கடல் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதே நமது இலக்கு. இவ்வாறு அவர் பேசினார்.
கடல் பாசிப் பூங்கா: இணை அமைச்சர் எல்.முருகன்பேசும்போது, “கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், மகராஷ்டிரா உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு ரூ.126 கோடியில் கடல் பாசிப் பூங்கா திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த2014-ம் ஆண்டு முதல் இதுவரை தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ ரூ.3ஆயிரம் கோடி நிதி வழங்கிஉள்ளோம்'' என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத் துறை செயலர் ஜந்திரா நான் ஸ்வைன், மீன்வள ஆராய்ச்சி துணை இயக்குநர் ஜே.கே.ஜெனா, கடல்சார் மீன்வள இணை இயக்குநர் ஜெ.பாலாஜி, தமிழ்நாடு அரசின் மீன்வளம், மீனவர் நலத் துறை செயலர் கார்த்திக், ‘ஐசிஏஆர்-சிபா’ இயக்குநர் குல்தீப் கே.லால், தேசிய மீன்வள மரபணு அமைப்பு (லக்னோ) இயக்குநர் யு.கே.சர்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT