

சென்னை: மனநோய் மற்றும் தூக்கமருந்துகள் தவறான பயன்பாட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்துக் கடைகளில் தொடர்ச்சியாக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னை, பெருங்குடி திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எனவே அந்த மருந்துக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் அக்கடையின் மீது சட்ட நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அம்மருந்துக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இந்நிலையில், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும். மீறினால் நட வடிக்கை எடுக்கப்படும் என்று சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் எச்சரித்துள்ளது.