

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள வந்து, பயிற்சியில் ஈடுபட்டபோது சேலம் இளைஞர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த ஹரிஹரன் (21) என்பவர் வந்திருந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் மண்டபத்தின் வெளியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இடையில் பிரட் சாப்பிட்டுள்ளார். அப்போது மூச்சு திணறல்ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளனர். இது குறித்து வடலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.