

விருதுநகர்: காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள சமுதாய சுகாதார வளாகத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்தில் நந்திக்குண்டு ஊராட்சியைச் சேர்ந்தது மேலதுலுக்கன்குளம் கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் பயன்படுத்துவதற்காகத் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 2021-22-ல் ரூ.5.25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கும், மாற்றுத்திறனாளி ஆண்களுக்கும் சமுதாய சுகாதார கழிப்பறை கட்டப்பட்டது.
அப்போதைய ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டியின் அறிவுறுத்தலின்பேரில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக சாய் தளப் பாதையுடன், கைபிடி இருக்கைகளுடன் கூடிய சிறப்பு வடிவிலான கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு நிதியில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாக வெறும் காட்சிப் பொருளாகாவே சுகாதார வளாகத்தைக் காண்கிறோம். அரசு நிதிதான் வீணாக்கப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
சுகாதார வளாகத்தை உடனடியாகத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் பெண்களும், மாற்றுத் திறனாளிகளும் மிகுந்த பயன்பெறுவார். எனவே, சுகாதார வளாகத்தைத் திறக்க அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.