நூறு நாள் திட்டப்பணிகளை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை - உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

நூறு நாள் திட்டப்பணிகளை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை - உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

மதுரை: நூறு நாள் திட்டப் பணிகளை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம் தாருகாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தாருகாபுரம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் நடக்கின்றன. இந்த பணியின் பொறுப்பாளர் 90 நாட்களையும் கடந்து கடந்த 7 மாத காலமாக பணியில் தொடர்கிறார். நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மூலம் தனி நபர் விவசாய நிலத்தில் வேலைகளை செய்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், நூறு நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நூறு நாள் வேலைத் திட்ட பணியை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்க முடியுமா? என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "நாடு முழுவதும் கோடிக்கணக்கிலும், தமிழகத்தில் பல லட்சம் பேரும் நூறு நாள் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வருகைப்பதிவேடு என்எம்எம்எஸ் செயலியில் பதிவு செய்யப்படுகிறது. திட்டப்பணிகள் தொடங்குவதும், முடிந்ததும் அந்த செயலில் பதிவு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் நூறு நாள் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. நூறு நாள் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுகிறது. திட்டப்பணிகளுக்கான செலவை விட அதிக செலவீனம் ஆகும் என்பதால் நூறு நாள் திட்டப்பணிகளை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், நூறு நாள் திட்டப்பணியில் முறைகேடுகளை தடுக்கவும், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in