Published : 27 Feb 2023 07:08 PM
Last Updated : 27 Feb 2023 07:08 PM

ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு மையங்களில் உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை: விஜயகாந்த் குற்றச்சாட்டு

விஜயகாந்த் | கோப்புப்படம்

சென்னை: “ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளை தடுக்காத தேர்தல் ஆணையம் தற்போது வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களிலும் தேவையான ஏற்பாடுகளை செய்யவில்லை" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காலை முதல் நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகியிருக்கும் நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். ஒருசில வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டதால், பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் மக்கள் மிகவும் சோர்வடைந்து மயக்கம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளை தடுக்காத தேர்தல் ஆணையம் தற்போது வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களிலும் தேவையான ஏற்பாடுகளை செய்யவில்லை. தேர்தல் புகார்களையும் தடுக்காமல், தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் செய்யாமல் யாருக்காக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

வெயில் காலம் என்பதால் வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, மக்களை பல மணி நேரம் காத்திருக்க வைக்காமல் விரைந்து வாக்களிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஈரோடு காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வரும் பொது மக்களை நீண்ட நேரம் நிற்க வைப்பதாகவும், தண்ணீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்று எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x