தேர்தல் ஆணையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது - பாஜக எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி குற்றச்சாட்டு 

சிஎஸ்ஐ மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி.| படம்: எஸ்.குருபிரசாத்.
சிஎஸ்ஐ மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி.| படம்: எஸ்.குருபிரசாத்.
Updated on
1 min read

ஈரோடு: தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு. ஆனால் தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் அது உள்ளது. அதனால் தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து பல புகார்கள் கூறியும் அது முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சி கே சரஸ்வதி கூறினார்.

ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் இன்று வாக்களித்தார் பின்னர் செய்தியாளிர்களிடம் கூறியதாவது: இத்தேர்தலில் ஏராளமான பணம் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் உள்ளன எனவே எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது பணநாயகத்தின் வெற்றியாகும். பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவரும் நிலை மாற்றப்பட வேண்டும். இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தான் திருமங்கலம் ஃபார்முலா போல ஈரோடு கிழக்கு பார்முலா உருவாக்கப்பட்டதாக மக்களும் பேசிக் கொள்கின்றனர்.

மக்களை தேர்தல் பணிமனையில் அடைத்து வைத்து பணம் உணவு விநியோகித்ததாக மக்களே பேசுகின்றனர். எனவே வாக்காளர்கள் பணம் வாங்க மறுக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்க முன்வர வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் பெருமை அடையும். வாக்களிக்கும் போது வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மையை அழிக்க ஸ்பிரிட் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இக்குறைபாடுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in