Published : 27 Feb 2023 06:38 AM
Last Updated : 27 Feb 2023 06:38 AM

குளறுபடிகள் நிறைந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு? - மறுதேர்வு மட்டுமே நியாயமான தீர்வு

கோப்புப்படம்

என்னவாயிற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு? போட்டித் தேர்வுகளை நடத்துவதில் யுபிஎஸ்சிக்கு இணையான நிபுணத்துவம்; குரூப்-4 தேர்வில் 15 லட்சத்துக்கும் மேற் பட்ட தேர்வர்களை திறம்படக் கையாண்ட அனுபவம் என டிஎன்பிஎஸ்சியின் கடந்த கால செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்துள்ளன.

ஆனால், முதல்முறையாக தேர்வுக்கான ஏற்பாடுகளில் ஆணையம் சறுக்கியுள்ளது. பொதுவாக, குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள், விடைத்தாளுடன் சேர்ந்தே இருக்கும். காலையில் நடந்த தமிழ்த் தாள் என்பது தகுதித் தேர்வு மட்டுமே. இதில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே, பொதுத் தாள் மதிப்பீட்டுக்கு பரிசீலிக்க முடியும். ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என்பதால், பெரும்பாலானோருக்கு இந்த தாள் எளிதாகவே இருந்தது.

அடுத்ததாக, பொதுத் தாள். இதில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மாநில அரசின் ‘கொள்கை சார் திட்டங்கள்’ பற்றிய வினாக்கள் சற்று கூடுதலாகவே தெரிந்தன. என்னதான் ஆணையம் தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு என்றாலும், மாநிலஅரசின் விருப்பத்துக்கு ஏற்பவே செயல்படுவதை, வினாக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி உணர்த்துகின்றன.

6 மதிப்பெண்கள் பகுதியில், சுற்றுச்சூழலில் மைக்ரோப்களின் மரபணுப் பொறியியல் தாக்கம்; சுற்றுச்சூழலில் கோவிட் தாக்கம்; குடும்ப வன்முறைக்கான சமூக காரணங்கள்; கோவிட் ஒருங்கிணைப்பில் உதவிய கூட்டாட்சி தத்துவம், பயோஜெட் எரிபொருள்; கல்பாக்கம் அணுமின் நிலையம், வியத்தகு இந்தியா, ‘உஜ்வாலா’, ‘மிஷன் சக்தி’; ஊழலுக்கு எதிரான அமைப்புகள் குறித்த வினாக்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தன.

ஏறத்தாழ இதேபோக்கு 12 மதிப்பெண் பகுதியிலும் தொடர்ந்தது. குழந்தைகள் நலம் நோக்கிய அரசின் நடவடிக்கைகள், தமிழ்நாடு தொழில் துறை வழித்தடம், கோயில்களில் மாநில அரசின் கட்டுப்பாடுகள் – நன்மை, தீமைகள், காலை உணவு திட்டம், ஐடிசி கோட்பாடு, நிதிநிலை அறிக்கை கோட்பாடுகள் ஆகியவை ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்தில் உள்ளன.

மாறுபட்ட விட்டம் கொண்ட குழாய்களின் வழியே செல்லும் தண்ணீர்; பாயும் மின்சாரம், சர்வதேச சிறுதானிய ஆண்டு, இந்தியாவின் 5 ட்ரில்லியன் பொருளாதாரம், தமிழ்நாடு பசுமை இயக்கம் குறித்துபோட்டித் தேர்வுகளைத் தாண்டியும், இளைஞர்கள் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. அந்த வகையில் ஆணையத்தின் அணுகுமுறை பாராட்டுக்கு உரியது.

பேரிடர் மேலாண்மை, பருவகால மாற்றங்கள் தொடர்பாக ஒரே மாதிரியான கேள்விகள் திரும்பத் திரும்ப வந்துள்ளன. இதைவிடவும் வேடிக்கை, காலையில் தமிழ்த் தாளில் 3-ல் ஒரு பங்கு சுருக்கி வரைதல் பகுதியில் ஒரு கட்டுரை உள்ளது. நிச்சயம் இதை எல்லா தேர்வர்களும் படித்திருப்பார்கள். ஏறத்தாழ இதையே பதிலாகக் கொண்ட ஒரு கேள்வி மாலை பொதுத் தாளில் வருகிறது.

ஒட்டுமொத்தமாக, கேள்வித்தாள் மீது பெரிதாக குற்றச்சாட்டு எதுவும் இல்லை. ஆனால், தேர்வு நடத்தப்பட்ட விதம் மிகுந்தஅதிர்ச்சி தருகிறது.

ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு பதிவெண் உண்டு. தேர்வு மைய நுழைவுச்சீட்டில் உள்ள பதிவெண்தான் இது. இந்த முறை, வினா/விடைத்தாள் புத்தகத்தில் இந்த எண் அச்சிடப்பட்டு இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட வினா-விடைப் புத்தகம், குறிப்பிட்ட தேர்வருக்கு மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், இந்த ஏற்பாடுமுறையாக செய்யப்படாததால் வினாத்தாள் மாறிவிட்டது.

தவறை உணர்ந்த கண்காணிப்பாளர்கள், வினாத்தாளை தேர்வர்களிடம் இருந்து திரும்பப் பெற்று, சரியான தேர்வருக்குத் தந்தனர். இதனால் சில மையங்களில், தேர்வுமீண்டும் தொடங்க ஒரு மணி நேரத்துக்கும் மேலானது.

தவறை அறிந்து விடைத்தாள் புத்தகத்தை திரும்பப் பெறும் முன்னரே சிலர் விடைகளை எழுதத் தொடங்கிவிட்டனர். மறுமுறை இந்த விடைத்தாள் வேறு ஒருவருக்கு போனபோது, அவரால் விடையை திருத்த இயலாமல் போனது. இது எப்படி சரியாகும்? எப்படி ஏற்க முடியும்?

மாலைத் தேர்வுக்கான வினாத்தாள்/விடைத்தாள் உறை, தேர்வர்கள் முன்னிலையில் அல்லாமல், வேறு ஒரு அறையில் பிரிக்கப்பட்டு, தேர்வர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், தேர்வர்கள் - கண்காணிப் பாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பல மையங்களில் தேர்வுஎழுதுவதற்கான 3 மணி நேரம் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் தேர்வர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த குளறுபடிகளால் தேர்வர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். தேர்வர்களின் விடைகள் கலந்திருக்க சாத்தியங்கள் இருக்கின்றன. ஏதோ ஒரு விதத்தில் தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர். ஆணையம் என்ன செய்யப் போகிறது?

இதற்கு ஒரே தீர்வு ‘மறுதேர்வு’தான். ஆணையத்தின் மீது இளைஞர்களுக்கு உள்ள நம்பிக்கை போகாமல் இருக்க, தேர்வை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு, வேறொரு நாளில் மறு தேர்வு நடத்துவதுதான் நல்லது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x