டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி அனுமதி மறுப்பு
டிடிவி தினகரன் அறிவித்திருந்த பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது.
"தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து சமூக நீதியை மத்திய அரசு நிலைநாட்ட வேண்டும் என்று கோரி அதிமுக அம்மா கட்சி சார்பில் வரும் 16-ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கும்" என்று அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.
மேலும், அக்கூட்டத்தில் தான் உரையாற்ற இருப்பதாகவும் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்போராட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது. இதற்கு, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்கள் தரப்பினர் பொதுக்கூட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதால் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
முன்னதாக, அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தினகரன் அணி சார்பில் 9-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது. அதையடுத்து டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்தார்.
அதன்பின்னர், செப்டம்பர் 16-ம் தேதி திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டிடிவி அறிவித்திருந்த நிலையில் தற்போது திருச்சி கூட்டத்துக்கு மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது.
