தஞ்சாவூர் | திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் தமிழ் மொழிக்காக யாகம் நடத்தி வழிபட்ட ஜப்பான் நாட்டினர்

தஞ்சாவூர் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நேற்று தமிழ் மொழிக்காக சிறப்பு யாகம் நடத்திய ஜப்பான் நாட்டினர். படம்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூர் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நேற்று தமிழ் மொழிக்காக சிறப்பு யாகம் நடத்திய ஜப்பான் நாட்டினர். படம்: ஆர்.வெங்கடேஷ்
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில் தமிழ் மொழியின் சிறப்புகள் மேலும் பரவ வேண்டும் என்பதற்காக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 20 பேர் சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தகாஈஹி எனப்படும் பாலகும்பமுனி என்பவரது தலைமையில் 8 பெண்கள் உட்பட 20 பேர் குரு தலம் என அழைக்கப்படும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் தமிழ் மொழி சிறக்கவும் மேலும் பரவ வேண்டும் என்பதற்காகவும் `ருத்ர யாகம்' என்ற சிறப்பு யாகம் நடத்தி நேற்று வழிபட்டனர். கோயில் சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் யாகம் நடைபெற்றது.

யாகம் முடிந்த பின்னர், புனித நீர் அடங்கிய கடங்களை மங்கல வாத்தியம் முழங்க கோயிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

இதுகுறித்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறியது: ஜப்பான் நாட்டில் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். அங்கு ஒட்டஹோமா பல்கலைக்கழகம், ஆசியன் நூலகத்தில் தமிழ் மொழியை கற்றுத் தருகிறேன்.தமிழ் மொழியையும், பண்பாடு, கலாச்சாரத்தையும் கற்க ஜப்பான் நாட்டினர் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர்.

அதேபோல, அவர்களது ஆன்மிகத் தேடலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள், முக்கியமான சிவாலயங்களில் வழிபடுவதுடன், சிறப்பு யாகங்களையும் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, தற்போது திட்டை கோயிலில் குரு பகவானுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் நடத்தியுள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பு உலகம் முழுவதும் பரவவும், தமிழ் மொழியை ஜப்பான் நாட்டில் அதிகமானோர் கற்கவும், உலக அமைதிக்காகவும், அனைவரும் நலமுடன் வாழவும் வேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in