

புதுக்கோட்டை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது விதிமீறல் அல்ல என சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உரிமைத் தொகை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என ஈரோடு கிழக்குத் தொகுதிஇடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர்பழனிசாமி குற்றம்சாட்டிஇருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இது, தேர்தல் விதிமீறல் அல்ல. ஒருவேளை அதிமுக வழக்குத் தொடர்ந்தால், அதை சந்திக்கத் தயாராக உள்ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
திருமங்கலத்தை மிஞ்சிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக கேட்டபோது, ‘‘அதிமுகவினர் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு, ஈரோடு பார்முலா என்ற புரளியை கிளப்பிவிட்டுள்ளனர்" என்று அமைச்சர் பதிலளித்தார்.