

பொள்ளாச்சி: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்காவிட்டால், 20 நாட்கள் கழித்து எனது தலைமையில் கனிம வளங்கள் கடத்தும் லாரிகளை பாஜகவினர் தடுத்து நிறுத்துவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து, கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மணல், மண், பாறைகள் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிகம் கடத்தப்படுகிறது. 3 யூனிட் கொண்டு செல்வதாக கணக்கு காட்டிவிட்டு கூடுதலாக 8 யூனிட் கடத்திச் செல்லப்படுகிறது. இங்குள்ள 11 சோதனைச்சாவடிகள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் இருந்து மட்டும் 1500 லாரிகளில் 12 ஆயிரம் யூனிட் மண் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இன்று முதல் 20 நாட்களுக்குள் கனிமவளங்கள் கேரளாவுக்கு செல்வதை தடுத்து நிறுத்தாவிட்டால் 21-ம்நாள் ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்துவார்கள். நானே தலைமை தாங்கி போராட்டத்தை நடத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.