Published : 11 Sep 2017 11:34 AM
Last Updated : 11 Sep 2017 11:34 AM

மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் பறவைகளை காக்க பழமரக்கன்று நடும் குமரி இளைஞர்கள்

மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மலையோரப் பகுதிகளில் பழ மரக் கன்றுகளை நடும் பணியை குமரி மாவட்ட இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவியது. கடந்த சில தினங்களாக மழை பெய்வது சற்று ஆறுதல் அளித்தாலும், பல மாதங்களாக நீடித்த வறட்சியால் பலவகையான பழ மரங்கள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டன.

பறவைகள் குறைந்தது

இதனால் பழங்களை உணவாக உட்கொண்டு வாழும் பல வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. காடுகளில் உணவு இல்லாத காரணத்தால் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறறது.

எனவே, விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான பழ மரங்களை மலைச் சரிவுகளில் நடுவதன் மூலம் அவற்றுக்கு உணவு கிடைக்க வழி ஏற்படும். மேலும், பறவைகள் இயற்கையான முறையில் விதைகளை பரவச் செய்து புதிய மரங்களை உருவாக்கவும் ஏதுவாக இருக்கும். பழங்களை உணவாக உட்கொள்ளும் பறவைகள் தமது எச்சங்கள் வாயிலாக விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு பரப்புகிறது. இதன் முலம் இயற்கையான முறையில் காடு உருவாகும்.

பழமரக்கன்றுகள் நடவு

இதை மையமாகக் கொண்டு குமரி மாவட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி நாவல் , நெல்லி, மா, பலா, வேம்பு போன்ற பறவைகளுக்கு உணவாகும் பழ மரங்களை மேற்கு தொடர்ச்சி மலைச் சரிவுகளிலும், வனப்பகுதியிலும் நட்டு வருகின்றனர். இதுகுறித்து இப்பணியை மேற்கொண்டு வரும் டைசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பல்லுயிர் பெருக்கம்

குமரி மாவட்டம் பாலை நீங்களாக நால்வகை நில அமைப்புகளும் கொண்டது. சமவெளிப் பகுதியில் வாட்டி எடுத்த வறட்சி மலைத் தொடர்களையும் விட்டு வைக்கவில்லை. மலைகளில் உணவும், நீரும் இல்லாமல் சமவெளிக்கு வந்த பறவைகளும், விலங்குகளும் நாம் எப்படிப்பட்ட அபாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை கண்ணாடி போல் உணர்த்தின.

எதிர்காலத்தில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்கவும், பறவைகளுக்கு உணவு கிடைக்க வழிவகை செய்யவும் மேற்கு தொடர்ச்சி மலையில் பழமரக்கன்றுகளை நட திட்டமிட்டோம். தற்போது மழை பெய்து வரும் நிலையில், பழ மரக்கன்றுகளுடன் புறப்பட்டோம்.

முதல்கட்டமாக தெள்ளாந்தி பகுதியில் உள்ள மலைத்தொடரில் மரக்கன்றுகள் நடும் பணியை முடித்துள்ளோம். மரங்களால் மட்டுமே நமக்கும் தேவையான மழை கிடைக்கும். பல்லுயிர் பெருக்கத்துக்கும் இது வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x