

சென்னை: காசிமேட்டில் பெரிய மீன்களின் வரத்து அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சென்னை, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், காசிமேட்டில் பெரிய மீன்களின் வரத்து நேற்று அதிகமாக இருந்தது. வஞ்சிரம், வவ்வால், ஷீலா, சங்கரா, திருக்கை உள்ளிட்ட பெரிய மீன்களை மீனவர்கள் அதிகளவில் பிடித்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை நாள் என்பதால், அதிகாலை முதலே அசைவப் பிரியர்கள் மீன் வாங்க குவியத் தொடங்கினர்.
இதேபோன்று, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில்லறை விலையில் விற்பனை செய்வதற்காக சிறு வியாபாரிகள் மற்றும்மீனவப் பெண்களும் மீன்களை வாங்கக் குவிந்தனர்.
வஞ்சிரம் கிலோ ரூ.800 முதல்ரூ.1000 வரையிலும், வவ்வால் கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரையிலும், சங்கரா கிலோ ரூ.400 முதல்ரூ.500 வரையிலும், நெத்திலி கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரையிலும், வெள்ளை ஊடான் கிலோ ரூ.150-க்கும், காரப்பொடி கிலோ ரூ.100-க்கும் விற்பனையானது.
அதேபோல் நவரை, கானாங்கத்தை, இறால் மற்றும் நண்டு போன்றவை கிலோ ரூ.300 வரையில்் விற்பனையானது. விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.