

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் கே.ஜெ.மருத்துவமனை (ஆராய்ச்சி மற்றும் பட்ட மேற்படிப்பு மையம்) இயங்கி வருகிறது. 1969-ம் ஆண்டில் முதல் முறையாக ஹீமோடயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவரும், மருத்துவமனை நிறுவனத் தலைவருமான மருத்துவர் கே.ஜெகதீசன் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்துவருபவர்களைக் குணப்படுத்தும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் 14 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்தபோது, மிகவும் குறைந்த செலவில், சில விநாடிகளில் தோல் மூலம் கரோனா தொற்றைக் கண்டறியும் நவீன எலக்ட்ரானிக் கருவியை இக்குழுவினர்கண்டுபிடித்தனர்.
ஆராய்ச்சி மற்றும் பட்ட மேற்படிப்பு மையமாகச் செயல்பட்டு வரும் கே.ஜெ.மருத்துவமனை 1969-ம் ஆண்டுதொடங்கப்பட்டது. இங்கு ஏராளமான மருத்துவர்கள் மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளைப் படித்தும்,பணியாற்றியும் உள்ளனர். அதேபோல், செவிலியர், லேப் டெக்னீசியன், மருத்துவமனை நிர்வாகம் போன்ற படிப்புகளைப் பலர் படித்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் படித்த, பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சி மருத்துவமனையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர்கள் உட்பட100-க்கும் மேற்பட்டோர், மருத்துவர் கே.ஜெகதீசனுடனான பழையநினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து, மருத்துவர் கே.ஜெகதீசன் மற்றும் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி மீரா ஜெகதீசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். அவர்களின் மகள் மருத்துவர் மஞ்சுவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர்கள் கூறுகையில், ``கே.ஜெ.மருத்துவமனை தொடங்கி 53 ஆண்டுகள் ஆகின்றன. இந்த மருத்துவமனையில் பயிற்சி பெற்ற பல மருத்துவர்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர். மருத்துவமனை பலரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்துள்ளது.
மருத்துவர் கே.ஜெகதீசன் அனைவரிடமும் நன்றாகப் பழகக்கூடியவர். அவரிடமிருந்து நாங்கள் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டோம். இதுவரை மருத்துவப் பணியாளர்கள் ஒன்று கூடும்நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதனால், மருத்துவமனை தலைவர் மருத்துவர் கே.ஜெகதீசனை கவுரவிக்கத் திட்டமிட்டோம். அதற்காக வாட்ஸ்-அப் குழு மூலம் அனைவரையும் ஒருங்கிணைத்தோம்.
வரும்மார்ச் 2-ம் தேதி மருத்துவர் ஜெகதீசனுக்கு பிறந்தநாள். அதனால்,மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி அவரை கவுரவித்து, பிறந்த நாள் கேக் வெட்டி,பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்'' என்றனர்.