Published : 27 Feb 2023 06:11 AM
Last Updated : 27 Feb 2023 06:11 AM
சென்னை: நமது அடையாளம் தமிழ்மொழி அல்ல, ஜனநாயகம்தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் சார்பில், இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு எதிர்ப்புக் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, “இந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை கடந்த 10 ஆண்டுகளாக திணித்து வருகின்றனர். ஜனநாயகம் என்பது ஒரு கருத்தியல்தான், தமிழ் மொழியைப் பாதுகாப்பதைத் தாண்டி, ஜனநாயகத்தைக் காப்பதுதான் நமக்கு முக்கியம். நமது அடையாளம் தமிழ் மொழி அல்ல, ஜனநாயகம்தான் நமது அடையாளம்” என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் பேசும்போது, "ஜனநாயக அடிப்படையில் இயங்கும் நாட்டில், ஒவ்வொரு குடிமகனிடம் இருந்தும் பெறப்படும் விண்ணப்பம், அக்கறையுடன் பரிசீலிக்கப்பட வேண்டும்.
மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள், எதிர்ப்பு என்ற ஒரு விஷயத்தை கண்டு கொள்வதே இல்லை. கடும் தாக்குதல் மூலம், தாங்கள் நினைத்ததை நிறைவேற்றுகின்றனர்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், முன்னாள் துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றப் பொதுச் செயலாளர் த.அறம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT