Published : 27 Feb 2023 07:08 AM
Last Updated : 27 Feb 2023 07:08 AM
சென்னை: இந்து முன்னணி நிர்வாகிகளை தாக்கிய தென்காசி மாவட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சங்கரன்கோவில் கோமதியம்மன் கோயில் அருகே திராவிடர் கழக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்றுகடந்த ஒரு வாரமாக இந்து முன்னணி மற்றும் சமூக சேவகர்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அங்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்ட கூட்டம் திட்டமிட்டபடி நடந்துள்ளது.
கோயில் அருகே அனுமதி மறுத்து, வேறு இடத்தில் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கட்டும் என்று கூறி அமைதியாக போராடிய இந்து முன்னணியினரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதே தென்காசி மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை தடுத்துநிறுத்தக் கோரி கடந்த வாரம் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்த இருந்தனர். ஆனால், பள்ளி இருக்கும் இடம், மக்கள் கூடும் இடம் என்று கூறி,காவல் துறை அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், மத உணர்வுகளை புண்படுத்தி, மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிப்பவர்களுக்கு கோயில் அருகிலேயே பாதுகாப்போடு அனுமதி கொடுத்திருப்பது மத விரோத செயலாகும்.
இந்து முன்னணி நிர்வாகிகளிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட துணை கண்காணிப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இனி வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தென்காசி மாவட்ட காவல் துறைக்கு முதல்வர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT