Published : 27 Feb 2023 06:18 AM
Last Updated : 27 Feb 2023 06:18 AM
சென்னை: மாற்றுத் திறனாளிகள் தகுந்த ஆவணத்தை காண்பித்தபோதும், அவர்களைக் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க மறுக்கும் நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு நிர்வாகத்தின் மேலாண் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு போக்குவரத்துக் கழகம் சார்ந்த அனைத்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் 40சதவீதம், அதற்கு மேற்பட்ட மாற்றுத் திறனுடையவர்கள் மற்றும் அவர்களுடன் துணையாகச் செல்லும் ஒருவர் ஆகிய 2பேரும் அடையாள அட்டையைக் காண்பித்து கட்டணமில்லாமல் பயணிக்க அரசு அனுமதித்துள்ளது.
ஆனால், மாநில மற்றும் தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை அல்லது புத்தகம் காண்பிக்கும் மாற்றுத் திறனாளி பயணிகளை ஒருசில நடத்துநர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்கவில்லை என புகார்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன.
எனவே, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சாதாரண கட்டண பேருந்துகளில் பயணிக்க வரும் மாற்றுத் திறனாளிகள், அவருடன் வரும் உதவியாளர் ஆகியோர் மாநிலமற்றும் தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டைஅல்லது புத்தகம் காண்பித்தால், அவர்களுக்கு கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டை நடத்துநர்கள் வழங்க வேண்டும் எனமீண்டும் உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவைப் பின்பற்றாத நடத்துநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, இந்த அறிவுறுத்தலை அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் நடத்துநர்களுக்கு நன்கு விளக்கிக் கூறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT