

கோவில்பட்டி: பணம் கொடுக்காமல் பதநீர் கேட்டு பனைத் தொழிலாளர்களை போலீஸார் தொந்தரவு செய்வதாகவும், மறுக்கும் பட்சத்தில் கள் விற்பதாக வழக்கு பதிவு செய்வோம் என, மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பனைத்தொழில் பரவலாக நடைபெற்று வருகிறது. மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை 6 மாதங்கள் பதநீர் காலம். இந்தாண்டு போதிய மழை பெய்யாததால் பனை மரங்களில் பாளை வருவதில் தாமதமானது. சீசன் தொடங்காத நிலையில் போலீஸார் சிலர் பனையேறும் தொழிலாளர்களிடம் பதநீர், கருப்பட்டி இலவசமாக கேட்டு தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “பதநீர் சீசன் தொடங்க சில நாட்கள் உள்ள நிலையில், இப்போதே போலீஸார் சிலர் பனையேறும் தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். கள் விற்பதாக வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டுகின்றனர்.
பனைத்தொழில் நல வாரியத்தில் தொழிலாளர் பலர் உறுப்பினராக இல்லை. அதனால் நலவாரியத்தில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பனைத்தொழில் செய்வோருக்கு கருப்பட்டி, கற்கண்டு, சில்லுக்கருப்பட்டி தயாரிப்பு செய்ய மானியத்துடன் கடனுதவி செய்வதாக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், அது விளாத்திகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதனால் புதூர் வட்டார பனைத் தொழில் புரிவோர் பயனடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தளர்த்த வேண்டும். மேலும், பனை தொழில்புரியும் குடும்பங்களை நிம்மதியாக தொழில் செய்யவிட வேண்டும். பனைத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.