7 ஆண்டுகளில் நாடு முழுவதும் 9 கோடி வழக்குகளுக்கு தீர்வு - நீதித் துறை அகாடமி இயக்குநர் ஏ.பி.சாஹி பெருமிதம்

7 ஆண்டுகளில் நாடு முழுவதும் 9 கோடி வழக்குகளுக்கு தீர்வு - நீதித் துறை அகாடமி இயக்குநர் ஏ.பி.சாஹி பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: தேசிய நீதித் துறை அகாடமி, தமிழ்நாடு மாநில நீதித் துறை அகாடமிசார்பில் சமகால நீதித் துறையின் வளர்ச்சிகள், சட்டம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் நீதியை வலுப்படுத்துதல் குறித்த 2 நாள் கருத்தரங்கம் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித் துறை பயிற்சி மையத்தில் நேற்று தொடங்கியது.

இக்கருத்தரங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், தேசிய நீதித் துறைஅகாடமி இயக்குநரும், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமைநீதிபதியுமான ஏ.பி.சாஹி பேசும்போது, ‘‘உலகிலேயே சிறந்ததாகஇந்திய நீதித் துறை விளங்குகிறது. கரோனா காலகட்டத்தை உள்ளடக்கிய 2016 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளில் நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட 10 கோடி வழக்குகளில், 9 கோடி வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பெருமிதம் அளிக்கிறது’’ என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசும்போது, ‘‘கரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் 64 லட்சம் வழக்குகள் காணொலி மூலமாக விசாரிக்கப்பட்டன. இதில்,சென்னை உயர் நீதிமன்றம் மட்டுமே 40 லட்சம் வழக்குகளை காணொலி மூலம் விசாரித்துள்ளது. மாவட்ட நீதிபதிகளுக்கு பயிற்சி அளிப்பதில் தமிழ்நாடு மாநில நீதித் துறை பயிலகம் உலகத்துக்கே முன்மாதிரியாக திகழ்வது பாராட்டுக்குரியது’’ என்றார்.

இக்கருத்தரங்கில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன், தென்மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் 24 பேர்,மாவட்ட நீதிபதிகள் 80 பேர் பங்கேற்றனர். இக்கருத்தரங்கம் இன்றும் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in