Published : 26 Feb 2023 06:42 AM
Last Updated : 26 Feb 2023 06:42 AM
பெரியகுளம் / சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(95). வயது மூப்பால் உடல் நலிவடைந்திருந்த நிலையில்,பெரியகுளத்தில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
தகவலறிந்த ஓ.பன்னீர்செல்வம் அன்றிரவே சென்னையில் இருந்து காரில் பெரியகுளம் விரைந்தார். தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது கால்களை பற்றிக் கொண்டு கதறி அழுத பன்னீர்செல்வத்தை உறவினர்கள் தேற்றினர். ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர்கள் ராஜா, சண்முகசுந்தரம், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ப.ரவீந்திரநாத் எம்.பி., ஜெய்பிரதீப் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று காலை பழனியம்மாள் நாச்சியாரின் உடல் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஓபிஎஸ்.ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், அதிமுக மாநிலங்களவை எம்.பி.தர்மர் மற்றும் மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் அமைச்சர் இ.பெரியசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் திமுக எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், சரவணக்குமார், தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலை 5 மணிக்கு அவரது உடல், முக்கிய வீதிகள் வழியே நகராட்சி பொதுமயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ஓபிஎஸ் இறுதிச் சடங்குகளை செய்தார்.
ஆளுநர், முதல்வர் இரங்கல்: இதற்கிடையே ஓபிஎஸ்-ஸின்தாயார் பழனியம்மாள் நாச்சியார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் மற்றும்பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரதுகுடும்பத்தினருக்கும் இரங்கல்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்று அறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி: அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு செய்தி மிகுந்த வேதனைக்கு உரியது. அதற்கு ஆழ்ந்த வருத்தங்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தியறிந்து, அவரை செல்போன் மூலமாக தொடர்புகொண்டு, அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார் என்ற துயரச் செய்தி அறிந்து வேதனையுற்றோம். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார்பழனியம்மாள் காலமானதையறிந்து வேதனையடைந்தேன். தாயாரை இழந்து வாடும் பன்னீர்செல்வத்துக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஓ.பன்னீர்செல்வத்தின் அன்னையார் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அலைபேசியில் அவரிடம் எனது துக்கத்தை தெரிவித்தேன். அவருக்கு எனது ஆழ்ந்த அனு தாபங்கள்.
பாமக தலைவர் அன்புமணி: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானதை அறிந்து வேதனை யடைந்தேன். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
விசிக தலைவர் திருமாவளவன்: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார்காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறேன். தாயாரை இழந்து வாடும் ஓபிஎஸ்ஸுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஓ.பன்னீர்செல்வத்தின் உயர்வுக்கு உரமிட்ட தாயார் பழனியம்மாள் வயது முதிர்வு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவு குடும்பத்தினருக்கு பேரிழப்பாகும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையடைந்தேன். தாயாரை இழந்து தவிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆழ்ந்த இரங்கல்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற தகவலறிந்து மிகுந்த வேதனையடைகிறோம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவால் வாடும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சகோதரர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
வி.கே.சசிகலா: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன்.
இதேபோல, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருநாவுக்கரசர் எம்.பி, மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT