7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
சென்னை: பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம், பணி பாதுகாப்புச் சட்டம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஆ.ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 44 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுஇல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையை மாற்றி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல் செய்வதுடன், அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு நிதியைமீண்டும் வழங்க வேண்டும்.
எமிஸ் சார்ந்த அலுவல் வேலைகளை மேற்கொள்ள தனி அலுவலரை நியமிப்பதுடன், ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட்டு எங்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
