Last Updated : 11 Sep, 2017 11:35 AM

 

Published : 11 Sep 2017 11:35 AM
Last Updated : 11 Sep 2017 11:35 AM

பாரதியார் 96-வது நினைவு தினம்: கவிதைகள் 18 மொழிகளில் வெளியாகுமா?- மத்திய அரசுக்கு பாரதியார் சிந்தனையாளர் மன்றம் மீண்டும் கோரிக்கை

பாரதியாரின் கவிதைகளை அரசியலமைப்பு சட்டம் அங்கீகரித்துள்ள 18 மொழிகளில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

மகாகவி பாரதியாரின் 96-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தேசிய கீதம், பக்திப் பாடல்கள், ஞானப் பாடல்கள், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, குருவிப் பாட்டு என 266 படைப்புகளை பாரதியார் அளித்துள்ளார்.

பாரதியாரின் கவிதைகளை அரசியல் நிர்ணய சட்டம் அங்கீகரித்துள்ள 18 மொழிகளில் வெளியிட வேண்டும் என பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த கோரிக்கையை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை 2008-ல் நிராகரித்தது.

இதனால் இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றத்தின் பொதுச் செயலர் ரா.லெட்சுமிநராயணன் உயர் நீதிமன்ற கிளையில் 2011-ல் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக சாகித்ய அகாடமி மற்றும் தேசிய புத்தக அறக்கட்டளையை அணுகலாம் என 28.3.2011-ல் உத்தரவிட்டது.

பின்னர் சாகித்ய அகாடமிக்கு பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றம் 19.12.2011-ல் கடிதம் அனுப்பியது. இதற்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு சாகித்ய அகாடமி பதில் கடிதம் அனுப்பியது. அதில், ‘பாரதியாரின் பாடல்கள் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அனைத்து புத்தகங்களும் விற்பனையாகிவிட்டன. ஒரு புத்தகம் கூட அகாடமி வசம் இல்லை. இப்புத்தகங்கள் அனைத்தும் மிகப் பழமையானதால் எவ்வளவு புத்தகம் விற்பனையானது என்பதை அறிய முடியவில்லை’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில், பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றம் மீண்டும் இந்த கோரிக்கையை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய கலாச்சாரத் துறை செயலருக்கு லட்சுமிநாராயணன் செப்டம்பர் முதல் வாரம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பாரதியாரின் பாடல்களை தமிழ்நாடு அரசு தேசிய உடமையாக்கியுள்ளது. பாரதியார் தேசிய கவியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது சிலை நாடாளுமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளது. பாரதியாரின் பாடல்கள் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. இப்பாடல்களை பிற மாநிலத்தவர்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள். இதனால் பாரதியாரின் பாடல்களை 18 மொழிகளிலும் அச்சிட்டு வெளியிட வேண்டும். இதற்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x