

சென்னை: ஐசிஎஃப் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் உள்ளிட்ட மாநகராட்சி மேற்கொள்ளும் 3 மேம்பாலப் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டலம், பெரம்பூர் நெடுஞ்சாலையில் புளியந்தோப்பு பகுதியை இணைக்கும் வகையில் ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பழைய பாலம் இடிக்கப்பட்டது.
அங்கு ரூ.43 கோடியே 36 லட்சத்தில், 282 மீட்டர் நீளம், 22.70 மீட்டர் அகலம் கொண்ட புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அண்ணாநகர் நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே சந்திக்கடவு எண்.1க்கு மாற்றாக வடக்கில் கொளத்தூர் பிரதான சாலையையும், தெற்கில் ஐ.சி.எப். சாலையையும் இணைக்கும் வண்ணம் இருவழி மேம்பாலம் ரூ.61 கோடியே 98 லட்சத்தில், சுமார் 500 மீட்டர் நீளம், 8.50 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. இம்மேம்பாலம் கொளத்தூர் பகுதியை அண்ணா நகருடன் இணைக்கும் முக்கிய இணைப்பு பாலமாகும்.
ரூ.26 கோடியில் நடை மேம்பாலம்: தியாகராயநகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில் நிலையத்துக்கு போக்குவரத்து நெரிசலின்றி மக்கள் பயணிக்க ரூ.26 கோடியில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நடை மேம்பாலம் 600 மீட்டர் நீளம், 4.20 மீட்டர் அகலமுடையது.
இவற்றில் நடைமேம்பாலம், பேருந்து நிலைய படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கி, ரயில்வே நிலைய இணைப்பு, ரங்க நாதன் தெருவில் படிக்கட்டுகள் அமைத்தல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
தற்போது ரயில்வே நிலையம் அருகில் மின்தூக்கி அமைத்தல், விளக்குகள், சிசிடிவி, பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகில் கழிவறைகள், ஜெனரேட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் நடைபெற்று வரும் 3 மேம்பாலப் பணிகளும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.