

சென்னை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை காவல் துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு, தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டபோது, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்தால், அதையே வாய்ப்பாகக் கருதி சமூக விரோதிகள் ஊடுருவி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவதுடன், பொது அமைதி மற்றும் பொது சொத்துக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
சமூக விரோதிகள் நடமாட்டம்: இது தமிழகத்தில் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதையும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையால் இயல வில்லை என்பதையும் காவல் துறையே ஒப்புக் கொள்வது போல உள்ளது.
எனவே, அனுமதி மறுப்பில் குறிப்பிட்டுள்ள சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து, கனிமவளக் கொள்ளையை தடுத்த நிறுத்த வேண்டிய பொறுப்பு தென்காசி மாவட்ட காவல் துறைக்கு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.