Published : 26 Feb 2023 04:10 AM
Last Updated : 26 Feb 2023 04:10 AM

சென்னை முழுவதும் தொடங்கியது வாகன நம்பர் பிளேட் சோதனை

சென்னை பூக்கடை காவல் நிலையம் அருகில் நேற்று இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்-களை ஆய்வு செய்து, விதிமீறல்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸார். படம்: பு.க.பிரவீன்

சென்னை: சென்னை முழுவதும் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனையை போலீஸார் நேற்று தொடங்கினர். விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மோட்டார் வாகன சட்டத்தின்படி, நம்பர் பிளேட்களில், படங்கள், ஆடம்பரமான எழுத்துகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நம்பர் பிளேட் அளவும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பல வாகன ஓட்டிகள் விதிகளை மீறி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த மாதம் 2 நாட்கள் சென்னை போக்குவரத்துக் காவல் துறையால் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி, ஒவ்வொரு போக்குவரத்துக் காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட 3 இடங்களில், தீவிர வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது. நம்பர் பிளேட்-களை சரி செய்ய வாகன ஓட்டிகளுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. எனினும், விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை முழுவதும் போக்குவரத்து போலீஸார் நேற்று வாகன நம்பர் பிளேட் சோதனை மேற்கொண்டனர்.

மெரினா உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில், பேருந்து நிலையங்கள், பெரிய வணிக வளாகங்களில் உள்ள வாகன நிறுத்து மிடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து, ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அபராதம் செலுத்திய விவரங்கள் மற்றும் திருத்தப்பட்ட நம்பர் பிளேட் புகைப்படங்களை 7871845566 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கும், g1veperytraffic@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்புமாறு போலீஸார் அறிவுறுத்தினர். மீண்டும் இதுபோல தவறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வாகன நம்பர் பிளேட் சோதனை நடைபெறும் என்றும் சென்னை போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x