

சென்னை: பயணிகள் வசதிக்காக, மெட்ரோ ரயில் பெட்டிகள் எண்ணிக்கை 4-ல் இருந்து 6-ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.முதல் கட்டம், முதல் கட்டம் நீடிப்பு திட்டப் பணிகள் நிறைவடைந்த பிறகு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த இரண்டு வழித் தடங்களில் 4 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரயில்கள் 34 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களில் தினசரி 1.80 லட்சம் முதல் 2.50 லட்சம் வரை பயணிக்கின்றனர்.
குறிப்பாக, நெரிசல் மிகுந்த நேரங்களிலும், வார இறுதி நாள்களிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணிகள் எண்ணிக்கை உயர்வதால், மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல் கட்டம் நீட்டிப்பு வழித் தடத்தில் பயணிகள் வசதிக்காக, மெட்ரோ ரயில் பெட்டிகள் எண்ணிக்கையை 4-ல் இருந்து 6-ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: தற்போது, 54 கி.மீ. தொலைவில் 4 பெட்டிகள் கொண்ட ரயில்கள் சராசரியாக 34 கி.மீ. வேகத்தில் இயங்குகின்றன. ஒரு ரயிலில் மூன்று பொதுப் பெட்டிகள் மற்றும் பெண்களுக்கான ஒருபெட்டி என 4 பெட்டிகள் இருக்கின்றன.
நாள் தோறும் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 பெட்டிகள் கொண்ட ரயில்கள் வாங்குவது தொடர்பாகவும்,4 பெட்டிகள் கொண்ட ரயிலில்கூடுதலாக 2 பெட்டிகள் சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில் நீண்டகால தீர்வை காண விரும்புகிறோம். இதற்காக ஆலோசகரை நியமித்துள்ளோம். ஒரு ஆய்வு மேற்கொண்டு, விரிவான திட்ட அறிக்கை வழங்க ஆலோசகரிடம் கேட்டு உள்ளோம். ஒரு மாதத்தில் ஆய்வு முடிவடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.