Published : 18 Sep 2017 10:54 AM
Last Updated : 18 Sep 2017 10:54 AM

பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள் கருத்து கேட்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்

‘பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அவை நவம்பர் மாதம் வெளியிடப்படும். அதன் பிறகு, கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த விழாவில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என ஜெயலலிதா கனவு கண்டார். அதை கல்வி மூலம் செயல்படுத்த முடியும் என்பதால், பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பணி அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கும். இந்த பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் 3 மணி நேரம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும்.

நீட் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணி அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவடையும். பாடதிட்டம் மாற்றம் மூலம், கல்வி கற்கும் அனைவருக்கும் வேலை வழங்கும் உத்தரவாதத்தை கொடுக்க முடியும்.

பாடத்திட்டம் மாற்றம் செய்வதற்கு முன் அந்த பாடங்கள் நவம்பரில் வெளியிடப்படும். கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டு தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும்.

மலேசியாவில் தமிழ் கற்றுகொடுப்பதற்கு ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. வேறு எந்த நாட்டிலும் தமிழ்மொழியை கற்றுக்கொடுக்கவும் இந்த அரசு தயாராக இருக்கிறது. டெல்லியில் 7 தமிழ் பள்ளிகள் உள்ளன. இன்னும் 1 பள்ளி தொடங்க ரூ.5 கோடியை வழங்க அரசு தயாராக உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x