Published : 26 Feb 2023 04:03 AM
Last Updated : 26 Feb 2023 04:03 AM

காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சை கருத்து: ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாகப் பேசியதாக ஆளுநர் ரவியை கண்டித்து சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னையில் கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சை கருத்து கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அரசியல் கட்சியினர் மற்றும்பல்வேறு அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சைதாப்பேட்டையில் நேற்று கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல் முருகன், ஜி.செல்வா, எல்.சுந்தரராஜன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது: மார்க்ஸ் மற்றும் டார்வினை கடுமையாக விமர்சித்து அவதூறாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். அரைகுறைவாகப் புரிந்துகொண்டு பேசிய ஆளுநருக்கு நாங்கள் அறிவுப்பூர்வமாக பதிலளிக்க உள்ளோம். ஆளுநர் ரவிக்கு, மார்க்ஸ் மற்றும் டார்வினை பற்றி ஒன்றும் தெரியாது.

அவர் ஆர்எஸ்எஸ்-ஸுக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். தனதுபேச்சுக்கு ஆளுநர் வருத்தம் தெரிவிக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘காரல் மார்க்ஸ் பற்றி தெரியாத ஆளுநருக்கு, ‘இளையோருக்கு மார்க்ஸ் கதை’ என்ற சிறுபுத்தகத்தை அனுப்பி வைக்க இருக்கிறோம். அவர் ஆளுநராக இருக்க வேண்டுமே தவிர அரசியல்வாதியாக இருக்கக் கூடாது. உலகில் எத்தனை தத்துவங்கள் இருந்தாலும் மார்க்சியம்தான் முதலான தத்துவம் என்று பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

விடுதலைப் போராட்டத்தை, போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த அமைப்புதான் ஆர்எஸ்எஸ். மார்க்ஸைப் பற்றிபேச ஆளுநருக்கு தகுதி கிடையாது. தமிழகத்தில் எந்த மூலைக்கு ஆளுநர் சென்றாலும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் சார்பில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x