Published : 08 Sep 2017 11:38 AM
Last Updated : 08 Sep 2017 11:38 AM

தி.நகர் பிரபல நகைக்கடை காவலாளி ரூ. 50 லட்சம் பணத்துடன் ஓட்டம்

தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடை பணம் ரூ. 50 லட்சத்துடன் கடையில் வேலை செய்த வட இந்திய காவலாளி தப்பியோடி விட்டார்.

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் பிரபல நகைக்கடை உள்ளது. நகைககளை அடகு வைத்தல், பழைய நகைகளை வாங்கி விற்று வாடிக்கையாளர்களுக்கு பணம் தருவது போன்ற தங்க நகை தொடர்பான அனைத்து வியாபாரங்களும் செய்து வருகின்றனர்.

இதன் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை மேலாளராக மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தினகரன் (வயது 27) என்பவர் உள்ளார்.

நகை கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பரிமாற்றங்களுக்காக கோடிக்கணக்கில் பணத்தை ஊழியர்கள் எடுத்து வருவது வழக்கம். கடைக்கு கொண்டு வரப்படும் பணம் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்புக்காக உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அயோத்தியநாத் யாதவ் (47) என்பவரை நியமித்திருந்தனர். இவர் பணத்தை பாதுக்காப்பாக வாங்கி வைத்துக்கொள்வார்.

கடந்த 5ம் தேதியன்று தலைமை அலுவலகம் பெங்களூருவிலிருந்து கடையின் கேஷியர் ராதாகிருஷ்ணன் ரூ. 50 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு நேற்று முன்தினம் காலை 6.00 மணி அளவில் சென்னை கிளைக்கு வந்தார்.

நகைக்கடை அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தார். அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பாதுகாப்பு பணியில் இருந்த அயோத்தியநாத் யாதவிடம் ரூ. 50 லட்சத்தை ஒப்படைத்த ராதாகிருஷ்ணன், அதற்குரிய ஆவணங்களில் கையெழுத்திட்டு விட்டு, நகைக்கடையின் அக்கவுண்ட்ஸ் மேலாளர் முருகேசன் என்பவரிடம் பணத்தை கொடுத்தது பற்றி தகவல் தெரிவித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

அன்றய தினம் காலையில் 9 மணிக்கு மேலாளர் தினகரன் நகைக்கடைக்கு வந்து பார்த்த போது நகைக்கடையில் இருந்த காவலாளி அயோத்தியநாத் யாதவ்வை காணவில்லை. அவரை தேடிப்பார்த்த போது எங்குமே இல்லை. செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் ரூ. 50 லட்சம் பணத்துடன் மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தினகரன் பணத்துடன் காவலாளி மாயமானது குறித்து நகைக்கடை உரிமையாளருக்கு தகவல் அளித்தார். உடனடியாக இது பற்றி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் தினகரன் புகார் அளித்தார். புகாரை பெற்ற பாண்டி பசார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணத்துடன் தலைமறைவான அயோத்தியநாத் யாதவ் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் அங்கு காவலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் எங்கே பதுங்கியுள்ளார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவரது புகைப்படத்தை வைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

தப்பி ஓடிய காவலாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x