Published : 03 Jul 2014 08:04 AM
Last Updated : 03 Jul 2014 08:04 AM

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தமே இல்லை: மத்திய வெளியுறவு அமைச்சக தகவலால் பரபரப்பு

கச்சத்தீவில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை வெளி யிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை மையப்படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவ நல அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.

கச்சத்தீவை மீட்டு, அங்கு தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமைகள் வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உள்பட தமிழக அரசியல் கட்சிகளும் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ‘இந்தியா - இலங்கை இடையிலான 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கோவையைச் சேர்ந்த சமூக சேவகர் எம்.சஞ்சய் காந்தி, மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு பதிலைப் பெற்றுள்ளார். இலங்கைக்கான இந்திய வெளியுறவு அமைச்சக துணைச் செயலாளர் மாயங்க் ஜோஷி கையெழுத்திட்டு அளித்துள்ள அந்த பதிலில், ‘தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா - இலங்கை இடையில் கச்சத்தீவு தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. அதேநேரம் இரு நாடு களுக்கு இடையிலான கடல் நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப் பந்தம் உள்ளது’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த பதில் வெளியுறவுத் துறை மூலம் அளிக் கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு மீட்பு இயக்கத் தினருக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதுகுறித்து சமூக சேவகர் சஞ்சய் காந்தி கூறும்போது, ‘‘கச்சத்தீவு ஒப்பந்தத்தின் நகல் வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் மத்திய வெளி யுறவுத் துறையிடம் கேட்டேன். அவர்கள் அப்படி ஒரு விண் ணப்பமே இல்லை என்று பதில் அளித்துள்ளனர். எனவே, இல்லாத ஒப்பந்தத்தை இருப்பதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்றும் வேலை நடக்கிறது. கடல் நீர் எல்லை தொடர்பான வரையறையிலும், இரு நாடுகளிடையே எந்தவிதமான அரசு முத்திரையோ, நாடாளுமன்ற அனுமதியோ, அரசு அதிகாரிகளின் கையெழுத்தோ இல்லை. எனவே, வெறும் வெற்றுத் தாளை ஒப்பந்தம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை’’ என்றார்.

கச்சத்தீவு மீட்பு போராட்டங் களை நடத்தி வரும் தூத்துக்குடி வீராங்கனை சமூக நல அமைப்பின் தலைவர் பாத்திமா பாபு, ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘மத்திய வெளியுறவுத் துறையின் இந்தத் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வெற்றுத்தாளை எப்படி ஒப்பந்தமாக ஏற்க முடி யும். அதுவும் மீன் பிடிப்பது தொடர்பாகவோ, தீவு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாகவோ எந்தவிதமான திட்டவட்ட வரையறையும் இதுவரை இல்லை என்பதே எங்களுக்கு பெரிய ஆவணமாக உள்ளது. எனவே, மத்திய வெளியுறவுத் துறையின் தகவலை மையமாக வைத்து, சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து போராட முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆவணத்தில், 1974-ம் ஆண்டு ஜூன் 26 மற்றும் 28-ம் தேதியில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ள வரையறை பிரிவு ஐந்தில், ‘கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர் கள் சென்று வரலாம். இதற்கு இலங்கை அரசிடம் விசா போன்ற போக்குவரத்து ஆவணங்கள் எதுவும் பெறத் தேவையில்லை. ஒவ்வொருவரின் கடல் பகுதி யிலும், இரு நாட்டு பாரம்பரிய நீர் வழி கலங்கள் இயங்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கச்சத்தீவு மீட்புக்குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீதையின் மைந்தன் கூறியதாவது:

இரு நாடுகளுக்கிடையே பாரம்பரிய நீர் வழிப் பகுதிகள் குறித்து எல்லை வரையறுத்ததில், நியாயமான முறை பின்பற்றப்படவில்லை. இந்தியாவுக்கு 18 கி.மீ, வரை நீர் எல்லை வகுத்துவிட்டு, இலங்கைக்கு 22 கி.மீ. வரை வகுத்துள்ளனர். சர்வதேச நீர் எல்லை விதிகளின்படி, இந்தியாவுக்கு 20 கி.மீ. என்று குறிப்பிட்டிருந்தால், கச்சத்தீவு சொந்தமா, இல்லையா என்ற கேள்வியே எழுந்திருக்காது.

மேலும் பாரம்பரிய நீர் எல்லை வரையறை ஒப்பந்தத்திலும், இரு நாட்டு நீர் வழிக் கலன்கள் (ஊர்திகள்) இயங்கலாம்; நீர் வழி உரிமைகளும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒப்பந்தப்படியே மீன் பிடிக்கும் உரிமை, வலை காயவைக்கும் உரிமை அனைத்தும் இந்தியாவுக்கு உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x