9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது: எஸ்எம்எஸ் மூலம் முடிவுகளை அனுப்ப சிறப்பு ஏற்பாடு

9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது: எஸ்எம்எஸ் மூலம் முடிவுகளை அனுப்ப சிறப்பு ஏற்பாடு
Updated on
2 min read

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு முதல்முறையாக, அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை அனுப்ப சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6,737 பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் 2,427 மையங்களில் தேர்வெழுதினர். தனித் தேர்வர்களாக 31,843 பேரும் சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதியவர்கள் ஆவர்.

தேர்வு முடிவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி மாத இறுதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 73 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. வழக்கமாக பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடந்துகொண்டிருக்கும் தருவாயில்தான் அறிவிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு தேர்வுகள் தொடங்குவதற்கு முன்னதாகவே தேர்வு முடிவு வெளியாகும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக் கப்பட்டன என்பது குறிப்பிடத்தக் கது. பிளஸ் 2 தேர்வு முடிவு மே 12-ம் தேதியும், எஸ்எஸ்எஸ்சி தேர்வு முடிவு மே 19-ம்தேதியும் வெளியாகும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி அறிவித்தார். திட்டமிட்டபடி, மதிப்பீடு மற்றும் இறுதி கட்டப் பணிகள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. சென்னை டிபிஐ வளாகத்தில் அரசுத் தேர்வுத் துறை தலைமை அலுவலகத்தில் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு தேர்வு முடிவு களையும், ரேங்க் பட்டியலை யும் வெளியிடுகிறார். தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில் மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்ணுடன் பின்வரும் இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

மேலும் ஒவ்வொரு மாவட்டத் திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre-NIC), அனைத்து மத்திய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் ஏதும் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளிகளில் தேர்வு முடிவு

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண் களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட் டிருந்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். அதேபோல், தனித்தேர்வர்களுக்கும் அவர்கள் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப் பித்தபோது அளித்திருந்த செல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப் படும்.

பள்ளி மாணவர்களும், தனித் தேர்வர்களும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மே 15 முதல் ஆன்லைனில் (www.dge.tn.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலம் மே 17 முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை

பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள அனைத்து மாணவர் களுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் செல்போனில் அனுப்பப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்ட மாற்றம் குறித்து முதல்வருடன் இன்று (நேற்று) நான் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினோம். அந்த கூட்டத்தில், பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் விரிவாக எடுத்துரைத்தார். தமிழக மாணவர்களை ‘நீட்’ உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு களுக்கு தயார்படுத்தும் வகையிலான பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடைபெறும் வகையில் ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த வசதியைப் பயன்படுத்தி அனைவரும் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள். இதுகுறித்து கிராமப்புறங்களிலும் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 25 சதவீத இடஒதுக்கீட்டை சரிவர பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in