உயர் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு: திண்டுக்கல் கலெக்டர், எஸ்.பி பதிலளிக்க உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் | கோப்புப் படம்
சென்னை உயர்நீதிமன்றம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: வனத் துறைக்கு சொந்தமான நிலத்தை அரசு உயர் அதிகாரி பினாமிகள் மூலமாக அபகரித்துள்ளதாக பொது நல வழக்கு தொடர்ந்தவர் போலீஸ் பாதுகாப்பு கோரி தொடர்ந்த வழக்கில் திண்டுக்கல் கலெக்டர், எஸ்.பி உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூலாத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கொடைக்கானல் பகுதியில் வனத் துறைக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலம், அப்போதைய குன்னூர் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநராக பணியாற்றிய அதிகாரி அம்பலவாணன் என்பவர் பினாமிகள் மூலம் வாங்கியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொநல வழக்கு தொடர்ந்தேன்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வனத் துறைக்கு சொந்தமான அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த முறைகேட்டுக்கு அப்போதைய வத்தலக்குண்டு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இதற்காக போலி வில்லங்க சான்றிதழ்களும் தயாரிக்கப்பட்டன. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் ஆவண மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அம்பலவாணனின் தூண்டுதலின் பேரில் சிலர் என் மீது பொய்யான புகார் கொடுத்துவருகிறார்கள. அந்தப் புகார்களின் மீது எனக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். எனக்கு மிரட்டல்களும் வருகின்றன. எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் கலெக்டர், டி.எஸ்.பி, தாண்டிக்குடி காவல் ஆய்வாளர் ஆகியோர் இந்த மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in