இன்று முதல் பிப்.28-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 200 இடங்களில் ‘நிலா திருவிழா’

இன்று முதல் பிப்.28-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 200 இடங்களில் ‘நிலா திருவிழா’
Updated on
1 min read

திருச்சி: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இன்று (பிப். 25) முதல் வரும் 28-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 200 இடங்களில் ‘நிலா திருவிழா’ நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ், அஸ்ட்ரோனாமிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து ‘நிலா திருவிழா 200’ என்ற நிகழ்வு கோவையில் 40 இடங்கள், சென்னையில் 30 இடங்கள், திருச்சியில் 25 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில் நடத்தப்பட உள்ளன.

வானவியலில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தொலைநோக்கிகளுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிப். 25-ம் தேதி (இன்று) முதல் 28-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் நிலா, வியாழன், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களையும், அன்றைய நாளில் தெரியக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களையும் காண்பிக்க உள்ளனர். இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு 6 கட்டங்களாக பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியைக் கொண்ட வைணு பாப்பு அப்சர்வேட்டரி சார்பிலும் இந்த 4 நாட்களும் நிலா திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வின்போது, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டு பயனடைவர் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in