அரசு மற்றும் உதவி பெறும் இல்லங்களின் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி - பிப்.27, 28-ல் சென்னையில் நடக்கிறது

அரசு மற்றும் உதவி பெறும் இல்லங்களின் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி - பிப்.27, 28-ல் சென்னையில் நடக்கிறது
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் முன்முயற்சியாக, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 36 அரசு மற்றும் 147 அரசு நிதி உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவன இல்லங்களில் உள்ள குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த, சமூகநலத் துறை சார்பில் ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் 38 மாவட்டங்களும் சென்னை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தட்டப்பாறை (தூத்துக்குடி) என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் கடந்த டிசம்பரில் நடைபெற்றது.

சென்னை மண்டல அளவிலான போட்டிகளில் 36 இல்லங்களிலிருந்து 960 குழந்தைகளும், ராணிப்பேட்டை மண்டல அளவிலான போட்டிகளில் 37 இல்லங்களிலிருந்து 700 குழந்தைகளும், தஞ்சாவூர் மண்டல அளவிலான போட்டிகளில் 57 இல்லங்களிலிருந்து 980 குழந்தைகளும், தட்டப்பாறை (தூத்துக்குடி) மண்டல அளவிலான போட்டிகளில் 39 இல்லங்களிலிருந்து 820 குழந்தைகளும் பங்கேற்றனர்.

இப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 375 குழந்தைகள் மற்றும் 150 இல்லப் பணியாளர்கள், சென்னை, நேரு வெளி விளையாட்டு அரங்கில் இம்மாதம் 27, 28-ம் தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in